×

தர்மபுரி மாவட்டம் தம்பதி கொலை வழக்கு: அதிமுக நிர்வாகி கைது

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகேயுள்ள பில்பருத்தி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (80), விவசாயி. இவரது மனைவி சுலோச்சனா (75), ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை. இவர்களது மகன் மணி (35), சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் மனைவி-குழந்தைகளுடன் சேலத்தில் வசித்து வருகிறார். மகள்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டதால், வயதான தம்பதி இருவரும் பில்பருத்தியில் உள்ள தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 12ம் தேதி இரவு கிருஷ்ணன்-சுலோச்சனா தம்பதியினர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டனர். சுலோச்சனா அணிந்திருந்த தாலி, தோடு, வீட்டில் இருந்த வங்கி பாஸ் புத்தகம் மற்றும் ஏடிஎம் கார்டு, 3 செல்போன்கள் கொள்ளைபோய் இருந்தது. இதுகுறித்து தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில், அதே பகுதியைச் சேர்ந்த 6 பேருக்கு கொலையில் தொடர்பிருப்பது தெரிய வந்தது.
இதுதொடர்பாக, பிரகாஷ்ராஜ் (19), முகேஷ்(19), ஹரீஸ் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில்,  ஹரீஸ் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார். கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய  வேலவன் (24), சந்துரு (22),  எழிலரசன்(26) ஆகியோர் தலைமறைவான நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்துரு, எழிலரசன் ஆகியோர் போலீசாரிடம் சிக்கினர். விசாரணைக்கு பின் 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அரூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வேலவனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், பொம்மிடியில் பதுங்கி இருந்த அவர் நேற்று தனிப்படை போலீசாரிடம் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சிறுவயதில் இருந்தே நண்பர்களான 6 பேரும், கடந்த ஒரு ஆண்டாக செலவுக்கு பணம் இல்லாமல் தவித்துள்ளனர். பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசையில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். 

The post தர்மபுரி மாவட்டம் தம்பதி கொலை வழக்கு: அதிமுக நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,AIADMK ,Krishnan ,Philbaruthi ,Bommidi ,Dharmapuri district ,Sulochana ,Dinakaran ,
× RELATED நவீன கருவி பொருத்திய 200 ஹெல்மேட் விநியோகம்